தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 22, 23-ந் தேதிகளில் விவாதம் நடைபெற்றது. அவர்களின் விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24-ந் தேதி பதிலளித்து பேசினார்.அதன் பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் அப்பாவு கூட்டியுள்ளார். இதன்படி, நாளை காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், அவைக்கு அளிக்கப்படும். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை படிப்பார். இதனைத் தொடர்ந்து வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
இதே நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை மற்றும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வரும் 20-ந் தேதி அவைக்கு அளிக்கப்பட உள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்? என்பதற்கான முடிவுகள், அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும். இந்த கூட்டத் தொடர் 4 நாட்கள் (20-ந் தேதிவரை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். அந்த விவாதங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத் தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும், மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், பல்வேறு புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

