இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழக அரசு தயாராக உள்ளது : முதல்வர் ஸ்டாலின்..!
இலங்கையை புரட்டிப் போட்ட 'டிட்வா' புயலுக்கு இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 191 பேர் மாயமாகியுள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதையடுத்து அங்கு, அவசரநிலையை, அந்த நாட்டின் அதிபர் அநுர குமார திசநாயகே அறிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 21 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் சென்ற நம் விமானப் படைக்கு சொந்தமான விமானம் இலங்கையை அடைந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உதவி செய்து வருகின்றனர். கடற்படை வீரர்களும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை வெள்ளம் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழக அரசு தயாராக உள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என மத்திய அரசு மூலம் உதவிக்கரம் நீட்டிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம். அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


