கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்..!!
தமிழ்நாட்டில் வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கும். இருந்தபோதிலும் அக்டோபர் மாதம் முழுவதுமே பரவலாக மழை பெய்யும். அதன்படியே தமிழகத்தில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. அதனுடன் தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும், அதேபோல் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதாவது அக்.15ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தனையொட்டி மழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார். மேலும், மாவட்ட அளவில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.