‘‘ஓரணியில் தமிழ்நாடு’.. டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கு பலிக்காது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 
TNHRCE - MK Stalin TNHRCE - MK Stalin

ஓரணியில் தமிழ்நாடு இருக்கும்போது எந்த டெல்லி அணியின் காவி திட்டமும் இங்கு பலிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

சிதம்பரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் மற்றும் முழு உருவச்  சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் . அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “ வரலாற்று சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. அருமை பெரியவர் ஐயா இளையபெருமாள் அவர்களுடைய நினைவரங்கத்தை திறந்து வைத்திருக்கிறேன்.  பெருந்தலைவர் காமராசர்  பிறந்தநாளில் பொதுமக்களுடைய குறைகளை  தீர்க்க மாபெரும் முன்னெடுப்பாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்கிற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’என்னும் திட்டம் மூலம் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட்ட  மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண்பேன் நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்திருந்தேன்.  சொன்னது போலவே முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் ‘உங்கள் தொகுதிகள் முதலமைச்சர்’ என்னும் ஒரு தனி துறையை உருவாக்கி, அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 

ungaludan stalin

 இதனால் நம் அரசின் மீது நம்பிக்கை வைத்து இன்னும் பல மனுக்களை வழங்கு தொடங்கினார்கள்.   அதற்காக ‘முதல்வரின் முகவரி’ என்கிற தனித்துறையை உருவாக்கினோம்.  அடுத்து ‘மக்களுடன் முதல்வர்’ என்கிற திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுக்க 5,000 முகாம்கள் நடத்தி பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம்.  இதுவரை ஆட்சிக்கு வந்து மனுக்களை பெற்று அதன் மேல் தீர்வு கண்ட விவரங்களை நேற்று கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்கள் விரிவாக  எடுத்துச் சொன்னார்.  இப்போது அடுத்த கட்டமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகங்களை தொடங்கி இருக்கிறோம்.  மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடக்கப் போகிறது.  தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று உங்களை சந்தித்து முகாம் நடக்கிற நாள்,  இடம் உள்ளிட்ட எல்லா தகவல்களையும் சொல்லிவிடுவார்கள் . என்னென்ன ஆதாரங்களை முகாமுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற தகவலையும் சொல்லி விண்ணப்பங்களை கொடுத்து விடுவார்கள். 

மாதம் ரூ.1000 வழங்கும்  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை  திட்டம் உள்ளிட்ட 46 சேவைகள் தொடர்பாக தீர்வு காணும் விண்ணப்பங்களை கொடுக்கப் போகிறோம். தகுதி இருந்தும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்காதவர்கள், உங்கள் பகுதியில்  நடக்கும் முகாம்களை அணுகி விண்ணப்பங்களை கொடுத்தால் போதும் நிச்சயமாக சொல்கிறேன் உரிமை தொகையை வழங்கப்படும்.  இந்த திட்டத்தின் நோக்கமே மக்கள் வசிக்கிற பகுதிக்கு சென்று அரசினுடைய சேவைகளையும் திட்டங்களையும் வழங்குவது தான். ‘இல்லம் தேடி கல்வி’,  ‘ மக்களை தேடி மருத்துவம்’திட்டங்களின்  வரிசையில் இந்த முன்னெடுப்பில் அரசு அலுவலகங்கள் அதிகாரிகள் உங்களைத் தேடி வர போகிறார்கள் .  

 சிதம்பர மண்ணில் பிறந்து நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்கான உரிமைகளுக்கான  அந்த வாசலை திறந்தவர் ஐயா இளையபெருமாள்.  திராவிடத்தை பின்பற்றுபவர்கள், அம்பேத்கரை பின்பற்றுபவர்கள், காந்தியை பின்பற்றுபவர்கள், தமிழ் தேசிய  சிந்தனை, மார்க்சிய சிந்தனை, பொதூடைமை சிந்தனை கொண்டவர்கள் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கூட்டணி தலைவர்கள், ஐயா இளையபெருமாள் அவர்களுக்காக மட்டுமல்ல,  நமது திராவிட மாடல் அரசினுடைய அனைத்து சமூக நீதித் திட்டங்களுக்கும் துணையாக இருப்பவர்கள் இவர்கள்,  என்பதை வெளிப்படுத்துவதற்காக வந்திருக்கிறார்கள்.  இதுதான் ‘ஓரணியில் தமிழ்நாடு’
 உறுதியோடு சொல்கிறேன் தமிழ்நாடு இப்படி ஓரணியில் இருக்கும் போது எந்த டெல்லி அணியுடைய காவித் திட்டமும் இங்கே பலிக்காது.  

Stalin

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் சொல்வதாக ஐயா இளையபெருமாள் கமிட்டி அறிக்கை தான் உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பில் ஆதாரமாக சுட்டிக் காட்டப்பட்டது.  இன்று தமிழ்நாடு அரசு சார்பில் 29 அர்ச்சகர்கள்  நியமிக்கப்பட்டு பல்வேறு கோவில்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு பெரியவர் ஐயா இளையபெருமாள் அறிக்கையும் ஒரு முக்கிய காரணம். 

நெஞ்சை நிமிர்ந்து சொல்கிறேன் தமிழ்நாடு திராவிட மாடல் அரசு தான் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு விரிவான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது.  ஆனால் இந்த திட்டங்கள் மற்றும் போதுமானதா என்று கேட்டால் போதாது.  காலணி என்று சொன்ன அரசு ஆவணங்களிலிருந்து நீக்க முடிவு எடுத்தோம்;  ‘ஆதிதிராவிடர்’ மற்றும் ‘பழங்குடியினர்’ என சாதிப் பெயர்கள் என மாற்ற வேண்டும் என பிரதமருக்கே கோரிக்கை வைத்திருக்கிறோம். அதற்கு  தொடர்ந்து போராடுவோம். சாதி அடையாளத்தோடு இருந்த பள்ளி, கல்லூரி விடுதிகளை இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என மாற்றி இருக்கிறோம்.  சமூக நீதி பயணம் என்பது நீண்ட நெடிய பயணம்;  அதற்கு இன்னும் காலம் பிடிக்கும். ஆனால் எல்லாம் மாறும்.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிச்சயம் மாற்றுவேன்..” என்று தெரிவித்தார்.  

மேலும்,  கடலூர் மாவட்டம்  குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் தோல் அல்லாத காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் ரூபாய் 75 கோடி மதிப்பில் 150 ஏக்கர் பரப்பளவில் 12 ஆயிரம் மகளிர் வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில்  தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்தார்