’ஓரணியில் தமிழ்நாடு..’ 50 லட்சம் உறுப்பினர்களை கடந்து மாபெரும் வெற்றி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மூலம் இதுவரை 50 லட்சம் உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய், நம் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை கடந்த 1ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தப் பரப்புரை மூலம், திமுகவினர் அனைவரும் தமிழ்நாட்டின் அனைத்து 100% குடும்பங்களையும் நேரில் சந்தித்து, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுப்பர்!
45 நாட்களுக்கு திமுக-வினர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2 கோடி 100% குடும்பங்களையும் சந்தித்து 1 கோடி குடும்பங்களையும், 2 கோடி உறுப்பினர்களை திமுகவில் உறுப்பினர்களாக பதிவு செய்ய இருக்கின்றனர். அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள 30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக பதிவு செய்தல் வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது., 45 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 15ம் தேதி ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையின் நிறைவு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுவரும் நிலையில், இதுவரை 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!
இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்! தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்களையும் 30,975 குடும்பங்களையும் கழகத்தில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது #திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம்! வெற்றி விழாவில் சந்திப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!
— M.K.Stalin (@mkstalin) July 10, 2025
இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!
தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த… pic.twitter.com/098bwfTCdF


