’தமிழில் பெயர் பலகை கட்டாயம்’ மீறுவோருக்கு அபராதத்தொகை உயர்வு - அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை..

 
அமைச்சர் சாமிநாதன்

பொது இடங்களில் வைக்கக்கூடிய பதாகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை மீறுவோருக்கு அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக வளாத்தில்  தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாலர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், “மாத உதவி  தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 100 நபர்களுக்கு மாதம் உதவி தொகை 3000 ரூபாயும், மருத்துவ செலவிற்காக 500 ரூபாயும் அதேபோல் தமிழ்நாடு முழுவதும் சென்று வருவதற்கு இலவச பேருந்து பயண வசதி பெறுகின்ற வகையில் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சர் தமிழ் வளர்ச்சிக்கென  பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிற சூழலில், இது போன்ற தமிழ் அறிஞர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில், தமிழ் மேலும் வளர்ச்சி பெறும்.  இந்தியை விரட்டி அடிக்கின்ற வகையில் குரல் கொடுத்தவர், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தவர் கலைஞர். கலைஞருடைய 6-வது நினைவு தினத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவி தொகை வழங்குவது சிறப்பான அம்சம். 

’தமிழில் பெயர் பலகை கட்டாயம்’ மீறுவோருக்கு அபராதத்தொகை உயர்வு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை.. 

பொது இடங்களில் வைக்கக்கூடிய பதாகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். குறிப்பாக எந்த மொழி இருந்தாலும் தமிழ் மொழி குறிப்பிட்டுள்ள அளவுக்கு இடம்பெற்றிருக்க வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவு இருந்து வருகிறது.   தற்போது அதனுடைய அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.  பொது இடங்களில் வைக்கக்கூடிய பதாகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை மீறுவோருக்கு அபராதத் தொகை  உயர்த்தப்பட்டிருக்கிறது.  தமிழ் வளர்ச்சி துறையும் தொழிலாளர் நலத்துறையும் இணைந்து அதற்கான நடவடிக்கையை எடுக்கும்” என்றார்.

திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதற்கு அரசு பேச்சுவார்த்தை நடத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று அதற்கு எந்த வகையில்  தீர்வு  காண முடியுமோ அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.