"வென்றது தமிழ்!" திருச்சியில் வைக்கப்பட்ட இந்திப் பெயர் பலகை அதிரடியாக அகற்றம்..!

 
11

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில் ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் எழுதப்பட்டிருந்தது. தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வு மேலோங்கியுள்ள சூழலில், இந்த நடவடிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் இதற்கு எதிராகக் களமிறங்கினர்.

திருச்சி மாநகர திமுகவினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த இந்தி எழுத்துகளைக் கருப்பு மை கொண்டு அழித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.

இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், இந்தித் திணிப்பு வெறியில் பாஜக எல்லை மீறிச் செல்கிறது. உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பாஜக அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த இந்திப் பெயர் பலகைகளை ரயில்வே ஊழியர்கள் அகற்றினர். இது குறித்து ரயில்வே நிர்வாக அதிகாரி கூறுகையில், அங்கு தமிழில் பெயர் வைக்க இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.