நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
தமிழகத்தில் நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (17-12-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 19-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


