"ரஜினியை நம்பி எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன்" - தமிழருவி மணியன் ஆவேச பேட்டி!!

 
TN

 எந்த முகத்துடன் நீ தமிழ்நாட்டு மக்கள் முன்னாடி போய் நிற்பீர்கள் என்று  ரஜினியிடம் கேட்டதாக தமிழருவி மணியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் சமீபத்தில் இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது.  எந்த மூலையில் இருக்கிறது என்பதை பற்றி பேசக்கூடிய தேவை இங்கு இல்லை. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரை மூலமாக தமிழக முழுவதும் நேரடியாக மக்களை சந்திக்கிறார்.  அண்ணாமலையின் யாத்திரை பாரதிய ஜனதா கட்சிக்கும் மக்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான பாதையை வழிவகுக்கும்.

tn

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ரஜினிகாந்த் சிஸ்டத்தை மாற்றி அமைக்க போகிறேன் வாங்க ஐயா என்று சொன்னார். அதனால் இருவரும் மூன்று வருடமாக ஒன்றாக பணியாற்றினோம். தொடர்ந்து காந்தி மக்கள் இயக்கம் ரஜினிக்காக செயல்பட்டது.நான் விரும்பிய விஷயத்தை ரஜினி என்னிடம்  கூறி நாம் இணைந்து செயல்படலாம் என்றார் . நான் அதை நம்பி அவரிடம் சென்றேன். ஆனால் அவர் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர் என்று எனக்கு எப்படி தெரியும்.

எத்தைத் தின்றால் பித்தம் தீரும்.  எனக்கு ஒரு மாற்று அரசியல் வர வேண்டும். உலகம் முழுவதும் உலகத் தமிழர்கள் கொண்டாடும் ஒரு மனிதர் அவர். வார்த்தைகளை வைத்துக்கொண்டு தான் மனிதர்களை பார்க்க முடியும். முதலில் அவர் ஒரு நண்பரை அனுப்பினார்.  நான் அவரிடம் ஐயா 20 ஆண்டு காலமாக அவர் அதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதனால் எனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டேன். மறுநாள் அவரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார். நிச்சயமாக நான் அரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் .மாற்று அரசியல் உருவாக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். சிஸ்டம் கெட்டுக்கெடக்கு. கெட்டுப் போய் உள்ள சிஸ்டத்தை உங்களுடன் இணைந்து சரி செய்ய நான் நினைக்கிறேன். நான் உங்கள் வீட்டுக்கு வரட்டுமா என்று கேட்டார். நான் ஒரு வாடகை வீட்டில் சாதாரண வீட்டில் இருக்கிறேன். என்னை தேடி நீங்கள்  வந்தீர்கள் என்றால் பரபரப்பு உருவாகும். நானே வந்து உங்களை பார்க்கிறேன் என்றேன்.

tn

நான் போன உடனே அவர் சொன்னது நான் முதலமைச்சராக கட்சி தொடங்கவில்லை. உடனே நான்,  முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக உங்களை சந்திக்க வரவில்லை என்றேன். எனக்கு எம்எல்ஏ ஆக வேண்டும் எம்.பி.., ஆக வேண்டும் , உங்களை வைத்து உயர வேண்டும் என்று ஆசை இல்லை. எனக்கு வேண்டியது மாற்று அரசியல். திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதனால் தான் நான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். நீங்கள் கடைசிவரை நிற்பீர்களா என்றேன். அவர் கடைசி வரை நிற்பேன் என்றார்.

நமக்கு இவ்வளவு செய்த தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் ரீதியாக நன்மை செய்ய வேண்டும் என்ற மனம் அவருக்கு வந்துள்ளதாக நினைத்து நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னவுடன் நான் நொறுங்கி  விட்டேன், கண்  கலங்கிவிட்டேன்.  எந்த முகத்துடன் நீ தமிழ்நாட்டு மக்கள் முன்னாடி போய் நிற்ப என்று அவரிடமே கேட்டேன். ரஜினியை நம்பி எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன். நான் ரஜினியுடன் தொடர்பில் இல்லை; அவர் மீண்டும் வந்தாலும் அவருடன் இணைய வாய்ப்பில்லை என்றார்.