ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடா?- மாடுபிடி வீரர் கண்கலங்கியபடி புகார்
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் தமிழரசன் என்ற வீரர் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
![]()
மதுரை பாலமேடு மஞ்சமலை ஆற்றுப்படுகையில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளும், மாடு பிடி வீரரும் உடல் தகுதி பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 8 மணிக்கு அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை ஆறு மணி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் 900-வீரர்களுக்கு பங்கேற்க டோக்கன் வழஙகப்பட்டது. இதில் 586 வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 500 வீரர்கள் களம் கண்டனர். காளைகளை பொறுத்தவரையில் 1100-காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதில் கோவில் காளைகள் உட்பட 930 காளைகள் களம் கண்டன. இதில், 20 காளைகள் உடல் தகுதி இல்லாததால் நீக்கப்பட்டன. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இறுதிச்சுற்றில் நத்தம் பார்த்திபன் (G-64) 14 காளைகளை அடக்கி துணை முதல்வர் சார்பாக வழங்கப்பட்ட காரை பரிசாக பெற்றார். அதற்கு அடுத்தபடியாக, 12 காளையை பிடித்து மஞ்சம்பட்டி துளசி ராம், இரண்டாம் இடத்தையும், 11 காளைகளை பொதும்பு பிராபா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். அதேபோல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சத்திரப்பட்டி விஜயபாண்டி காளை சிறந்த காளையாக தேர்வு செய்யட்டது.
![]()
இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழரசன் என்ற வீரர் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 2023,2024 பாலமேடு ஜல்லிக்கட்டில் இருமுறை முதல் பரிசு வென்ற இவர், இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அமைச்சர் மூர்த்தி, தனது சமூகத்தை சேர்ந்த வீரருக்கு ஆதரவாக இருக்கிறார் என தமிழரசன் புகார் கூறியுள்ளார். போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் விளையாட அனுமதிக்கவில்லை என்றும், ஜல்லிக்கட்டில் களமிறங்க முயற்சித்தபோது போலீசார் தாக்கியதாகவும் தமிழரசன் கண்ணீருடன் வேதனையை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


