தமிழிசை - அண்ணாமலை ஆதரவாளர்கள் மோதல் - மேலிடம் அறிக்கை கேட்பதாக தகவல்!

 
tt tt

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது . இருப்பினும் பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது வெகுவாக விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவுக்கான வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தனியாக போட்டியிட்டது தான் இதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது என்று தெரிவித்தார்.  ஆனால் முன்னாள் ஆளுநரும்,  தமிழக முன்னாள் பாஜக தலைவருமான  தமிழிசை சௌந்தரராஜன் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருந்தால் 25 முதல் 35 இடங்கள் கிடைத்து இருக்கும் என்று கூறியிருந்தார். 

Annamalai

அத்துடன் பாஜகவை சேர்ந்த கல்யாணராமனும் தோல்விக்கு அண்ணாமலையின் முடிவுகளும் தான் காரணம் என்று தனது வலைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் தமிழக பாஜக உட்கட்சியில் பிரச்சனை வெடிக்க தொடங்கியுள்ளது.  அண்ணாமலையின் ஆதரவாளர்களும், தமிழிசையின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

Tamilisai
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன்,வானதி சீனிவாசன் ஆகியோரிடம் கட்சி மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை - தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் நீடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.