ஊழல் செய்வதற்குதான் லட்டில் மாட்டு கொழுப்பு கலந்துள்ளனர்- தமிழிசை
திருப்பதியில் ஊழல் செய்வதற்குதான் லட்டில் மாட்டு கொழுப்பு கலந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களின் உணர்வுகளோடு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, தவறு செய்தது யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “திருப்பதி லட்டு விவகாரத்தில் திருப்பதியில் ஊழல் செய்வதற்குதான் லட்டில் மாட்டு கொழுப்பு கலந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களின் உணர்வுகளோடு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்தது யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். கோவில்களில் அரசாங்கம் பிரச்சினை ஏற்படுத்த கூடாது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் திமுகவின் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் நிர்வாகத்தில் உள்ளனர். கோவில் சொத்துக்களை எடுக்க பாரபட்சம் காண்பிக்கின்றனர்.
சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களில் வரும் வருமானம் அவர்களுக்காகவே செலவு செய்யப்படுகிறது. ஆனால் இந்து கோவில் வருமானம் இந்து கோவிலுக்கு கூட செலவு செய்வதில்லை. எனவே இந்து கோவில் நம்பிக்கையானவர்கள் கையில் வர வேண்டும். திருப்பதியில் கூட நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதை பற்றி கவலையின்றி இருந்துள்ளனர்.அதில் முழுமையாக நம்பிக்கை வைத்தவர்கள் தான் அதை கண்டுபிடித்துள்ளார்கள்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாநாடு நடத்துவதற்கு ஒருவழியாக அக்டோபர் 27 ஆம் தேதியை அறிவித்துள்ளார். அதில் எந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்கிறார் என்று சொல்லட்டும். தற்போது வரை ஒரு சாயத்தை பூசிக் கொண்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். திமுக பாதையில் செல்கிறார். நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். இரு மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால் தன்னுடைய படம் எல்லா மொழியிலும் வெளிவர வேண்டும், ஆனால் குழந்தைகள் மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள கூடாது என்பது எவ்விதமான நியாயம்?” எனக் கேள்வி எழுப்பினார்.