அதிமுக வேட்பளராக தென்னரசுவை அறிவித்து படிவம் வெளியிட்டார் தமிழ்மகன் உசேன்

 
admk office

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து பொதுக்குழு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது..ஈரோடு இடைத்தேர்தலில்  இருவருக்கும் உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும், ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவில்  நீக்கப்பட்டவர்களை, சேர்த்து பொதுக்குழு கூட்ட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி பழனி்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து பொதுக்குழு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார். பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவை தலைவர் தமிழ்மகன் உசேன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.