திராவிட மாடலில் தொற்று நோய்களின் தொட்டிலாக மாறும் தமிழகம் - பாஜக விமர்சனம்
'திராவிட மாடல்' எனும் மாய நோயினால் அவதியுறும் தமிழகத்தை மேலும் பல நோய் பாதிப்புகளுக்கு உள்ளாக்காமல், நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மக்களை காக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தங்களது துறையின் தவறுகளால் தமிழகத்தில் நாள்தோறும் நோய்கள் பெருகிவருவதை கண்டுகொள்ள முனைவீர்களா ? தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இருமடங்கு சிக்கன்குனியா காய்ச்சல் பாதிப்பு பெருகியுள்ளதை அறிவீர்களா? தங்களது திமுக அரசு ஆட்சிக்கு வந்த 2021ல் 153 ஆக இருந்த சிக்கன்குனியா காய்ச்சல் பாதிப்பு, 2022 - 181, 2023- 222, 2024 - 512 என தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்? தமிழகத்தில் டெங்கு தொற்று பெருகிவருகிறது என்று அனைவரும் எச்சரித்த போது பூசி மொழுகாமல் தக்க நடவடிக்கை எடுத்து ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்தாதது ஏன்?

அன்று தங்களது பொறுப்பினை தட்டிக்கழிக்காது இருந்தால், இன்று அதே ஏடிஸ் கொசுக்களால் பரப்பப்படும் சிக்கன்குனியாவை கட்டுப்படுத்தியிருக்க முடியுமல்லவா? தேங்கிவரும் தண்ணீரினால் ஏடிஸ் கொசுக்கள் மேலும் பெருகும் அபாயம் உள்ள நிலையில், மழை நீர் தேங்குவதைத் தடுக்க தங்களது திமுக அரசு எடுத்த முயற்சிகள் என்ன? இந்த ஆண்டு அக்டோபர் வரை மட்டுமே 512 நபர்கள் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாய் பதிவாகியுள்ள நிலையில், பருவ மழை வேளையில், இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு வாய்ப்புள்ளதை அறிந்து இனிமேலாவது தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? தனது செயல்பாட்டின்மையினால் கழிவுநீர் கலந்த குடிநீர் கொண்டு சில உயிர்களை காவு வாங்கிய தங்களது சுகாதாரத்துறை, தற்போது சிக்கன்குனியாவிற்கும் டெங்குவிற்கும் மேலும் பல உயிர்களை பலியிடும் நிலை ஏற்படாது தவிர்க்க வேண்டும்! ஏற்கனவே 'திராவிட மாடல்' எனும் மாய நோயினால் அவதியுறும் தமிழகத்தை மேலும் பல நோய் பாதிப்புகளுக்கு உள்ளாக்காமல், நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மக்களை காக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


