மனோ தங்கராஜ் அவர்களே…பகுத்தறிவோடு பதில் சொல், அல்லது பதவி விலகு - பாஜக கடும் விமர்சனம்

 
mano

ஆவின் விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அண்ணாமலை இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்துள்ளது. 
 
தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், மனோ தங்கராஜ் அவர்களே…“எப்படி இருக்க பா? என்ன மக்கா… சந்தோஷமா இருக்கியா?” சரி… ஏன் இதுவரை கேட்ட எந்த கேள்விகளுக்கும் உருப்படியான பதில் சொல்லல?  மறுபடியும் கேட்கிறோம்! பகுத்தறிவோடு பதில் சொல், அல்லது பதவி விலகு! முதலில், ஆவின் முறைகேடுகள் குறித்து தலைவர் அண்ணாமலை அவர்கள் கசப்பான கேள்விகளை கேட்டதால், கடுப்பில் அவர் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே?  6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், வெறும் 4.79% கொழுப்புச் சத்து மட்டுமே இருப்பது, FSSAI அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில், தமிழக பாஜக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. பாக்கி 1.21% எங்கே?


உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (FSSAI) பரிந்துரைப்படி, நிலைப்படுத்தப்பட்ட பாலில் 4.5% கொழுப்புச்சத்து இருக்க வேண்டியது அவசியம். அதை 3.5% மாக குறைத்தது ஏன்? இந்நிலையில், பாலில் உள்ள கொழுப்பினை 4.5%ல் இருந்து 3.5% க்கு குறைத்த பின்பும், அதன் விலையை குறைக்காதது ஏன்? FSSAI பரிந்துரைப்படி, அளவில் 3% கொழுப்புள்ள பால் மட்டுமே சமன்படுத்தப்பட்ட பாலாக வகைப்படுத்தப்படும். ஆனால், தற்பொழுது 3.5% கொழுப்புள்ள “டிலைட்” பாலை சமன்படுத்தப்பட்ட பாலென்று எவ்வாறு அழைக்க முடியும்?

அறிவாலயம் ஆட்சிக்கு வந்த 2 வருடங்களில், பால் கொள்முதல் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உதாரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பால் கொள்முதலில் 6 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது ஏன்? பதில்களுக்கு மக்களோடு அமர்ந்து காத்திருக்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.