கர்நாடக தேர்தலில் அதிமுக தனித்து போட்டி - அண்ணாமலை இன்று அவசர ஆலோசனை

 
annamalai

கர்நாடக தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் தனித்து போட்டியிடும் நிலையில், அது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்துகிறார். 

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஆட்சி செய்து வருகிறார். 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதை அடுத்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். . இந்நிலையில், நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அன்பரசனை நிறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் தனது தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக கர்நாடக தேர்தலில் தனித்து போட்டியிடுவது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணிக்கு அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூடுகிறது. கர்நாடகாவில் ஒரு இடத்தில் அதிமுக தனித்து போட்டியிடும் நிலையில் கூட்டணி தொடர்பாக அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்துகிறார்.