கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு அனுமதி - அண்ணாமலை கண்டனம்!

 
Annamalai Annamalai

கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுமானத்தை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


இந்நிலையில், தமிழக அரசின் இந்த முடிவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு.  மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக,  வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம்.  உடனடியாக இந்த அரசாணையைத்  திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.