யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து ஆகாது - அண்ணாமலை திட்டவட்டம்

 
Annamalai

தமிழ்நாட்டை பொறுத்தவரை நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றும், யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் திமுக நிர்வாகியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுங்கட்சியான திமுக அரசு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதனிடையே கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக பாஜக சார்பில் பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அண்ணாமலை அறிவித்தார். இதனையடுத்து அந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து, பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது: ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். பிரதமரை அண்மையில் அமைச்சர் உதயநிதி சந்தித்தால் ஒன்று நீட் தேர்வில் மாற்றம் நடக்கப்போவதில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. இவ்வாறு கூறினார்.