“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்- பாஜக

 
amaran

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், படக்குழுவினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

Image

இதுதொடர்பாக தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், “சமீபத்தில் காஷ்மீரில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி உயிர்நீத்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் திரு. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் “அமரன்” என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க தேசப்பற்றையும் இராணுவ வீரர்களின் தியாகத்தை பறைசாற்றும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் கதை என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆகையால் தான் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உட்பட உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து தரப்பு மக்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.


 

ஆனால், இப்படத்தில் இஸ்லாமிய மக்களை தவறாக சித்தரித்துள்ளதாக அவதூறுகளைப் பரப்பி, இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தினை அறிவித்துள்ள SDPI-யின் வெறுப்பரசியலை வன்மையாகக் கண்டிக்கிறோம். மிக அமைதியாகவும், கட்டுப்பாடோடும், தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக நடக்கும் RSS அமைப்பின் பேரணியை ஆயிரம் கேள்விகளால் துளைத்தெடுத்து, அனுமதி கொடுக்க மறுத்த திமுக அரசு, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இங்கிருக்கும் அமைப்புகள் “அமரன்” திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் செய்வதை வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் மற்றும் இப்படத்தில் பணியாற்றியவர்களை அச்சுறுத்தும் வகையில் சில அமைப்புகள் பேசி வரும் நிலையில், அக்கலைஞர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை தமிழக பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.