குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? - முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

 
mk stalin

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

stalin

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினார். அந்த தொகுதிக்குட்பட்ட சம்பத் நகரில் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து காந்தி சிலை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். பிரசாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:   கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன். திமுகவின் அடித்தளமே ஈரோடு தான், மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும்.  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம். இவ்வாறு பேசினார்.