கடந்த காலத்தை ஒப்பிடும் போது தற்போது பாதிப்பு குறைவே - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin

சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்க திட்டமிட்டுள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மழை நின்றதை தொடர்ந்து மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,  சென்னை கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தங்கி இருக்கும் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அங்கு தயார் செய்யப்பட்ட காலை உணவுகளை அங்குள்ள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

stalin

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்தபோதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது தற்போது பாதிப்பு குறைவாகவே உள்ளது. 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு அதிகம்.
2015ல் ஏற்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் உண்டான செயற்கை வெள்ளம். தற்போது ஏற்பட்டுள்ளது இயற்கையான வெள்ளம். ₹4000 கோடிக்கு வடிகால் பணிகள் மேற்கொண்ட காரணத்தால்தான் தற்போது சென்னை தப்பியுள்ளது. 2015 வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கக் கூடாது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.