40 தொகுதிகளிலும் நான் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு உழைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

 
stalin

40  தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு கழக உடன்பிறப்புகள் பணியாற்றிட அன்போடு கேட்டு கொள்கிறேன் என தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசில் மக்களாட்சி மாண்பைக் காக்கும் மகத்தான புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜ.க.வை வீழ்த்துவது என்பது மட்டுமல்ல, அதன் பிறகு கூட்டாட்சி அரசாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 'இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டது. தங்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்ற மமதையுடன் இருந்த பா.ஜ.க தலைமை அதன் பிறகு 'இந்தியா' என்ற சொல்லையே சொல்லாமல் தவிர்த்தது. 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளைத் தன்னுடைய அதிகார அமைப்புகளின் மூலமாக வேட்டையாடிய பா.ஜ.க.வின் சர்வாதிகார நடவடிக்கைகள்தான், இந்தக் கூட்டணியின் வலிமையை நாட்டுக்கு உணர்த்தியது. 

stalin

ஆட்சி முடியப் போகும் நிலையில் மாநிலம் மாநிலமாகச் சென்று திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடியின் பதற்றம், அவர் முகத்தில் இருக்கும் பயத்தைக் காட்டுகிறது. 'வேண்டாம் மோடி' என்ற முழக்கமே இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கிறது. பா.ஜ.க.வை வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நேற்றைய தினத்துடன் மிகச் சிறப்பாக முடிவுற்றது என்பதை மனமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்ட இந்த ஒற்றுமை உணர்வுதான் 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.


புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும், 'வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க தி.முக. தலைமையிலான கூட்டணி நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும். பத்தாண்டு கால பாஜக ஆட்சி இந்தியாவைப் பாழ்படுத்தியதை, மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு அடைந்துள்ள ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள். இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சி அமைய வேண்டிய அரசியல் தேவையை உணர்த்துங்கள். நாற்பதும் நமதே! நாடும் நமதே என குறிப்பிட்டுள்ளார்.