அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிமைப்படுத்தலாம் என மத்திய அரசு நினைக்கிறது - கே.எஸ்.அழகிரி

 
ks alagiri ks alagiri

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனையிட்டு வருகின்றனர். விழுப்புரத்தில் வீடு பூட்டியிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், வீட்டை திறக்க வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் , கிழக்கு சண்முகாபுரம் காலனி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு செம்மண் குவாரி தொடர்பாக வழக்கில் சோதனை நடைபெறுகிறது.

ponmudi

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.எஸ்.அழகிரி கூறியதாவது: அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிமைப்படுத்தலாம் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. மத்திய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. என்றாவது அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினார்களா? தமிழ் மண்ணில் பாஜக தோல்வியடையும். அமலாக்கத்துறை சோதனையால் மக்களிடையே எதிர்கட்சியினருக்கு செல்வாக்கு அதிகமாகும். இவ்வாறு கூறினார்.