பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு - காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம்

 
congress Protest

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டது. 

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தமிழகத்திற்கு  வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.  அதன் பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையும் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இது இந்தியாவின் 11வது வந்தே பாரத் ரயில் சேவையாகும்.  தொடர்ந்து  விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு,  பல்லாவரத்தில் இருக்கக்கூடிய மைதானத்தில்,   ரூ.294 கோடி மதிப்பிலான 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையில் 37 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதை,  தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் விரைவு ரெயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.    

இதனிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்தார். அதன்படி சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருப்பு சட்டை அணிந்து வந்தார். அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லப பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கருப்பு கொடி போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டு இருந்தது. மேடையை சுற்றி இரும்பு தடுப்புவேலி அமைத்து அதற்குள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். போராட்ட களத்தில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியே செல்லாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.  கருப்பு சட்டை அணிந்து கருப்பு பலூன் பறக்கவிட்டு பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.