இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் - டிஜிபி விளக்கம் அளிக்க உத்தரவு

 
dgp and sahu

ஈரோடு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாக அளிக்கப்பட்ட புகாரில் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கியது. 

Erode East

இதனிடையே இடைத்தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் அளித்தார். இதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் புகார் கொடுத்தார்.  இந்த நிலையில்,  ஈரோடு கிழக்கில் திமுக பணப்பட்டுவாடா செய்ய போவதாக பாஜக அளித்த புகாரில் எடுத்த நடவடிக்கை என்ன? என டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நடந்த சம்பவத்தை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அதை தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.