மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

 
governor and amit sha governor and amit sha

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. முதலமைச்சர் தொடங்கி, சபாநாயகர் அப்பாவு வரை, அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தனர். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 6:15 மணி அளவில் விமான மார்க்கமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். ஒரு வாரம் டெல்லியில் இருக்கும் அவர், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்துக் கேட்குமாறு  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து அவருடன் ஆலோசனை நடத்தி, செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய முடிவுகளை ஆளுநர் எடுக்கலாம் எனத் தெரிகிறது.  

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமித் ஷா உடனான சந்திப்பின் போது தமிழகத்தின் அரசியல் நிலவரம் மற்றும் சட்டம், ஒழுங்கு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிப்பார் என கூறப்படுகிறது.