மேல்முறையீடு செய்த 2 லட்சம் மகளிருக்கு ஜன.10ல் உரிமை தொகை வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு

 
Tamilnadu arasu

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு ஜனவரி 10ம் தேதி வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள 1.15 கோடி பேருக்கு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்,  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு ஜனவரி 10ம் தேதி வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்திருந்த நிலையில் முதற்கட்டமாக தகுதியுள்ள 2 லட்சம் பேருக்கு இம்மாதம் உதவித்தொகை கிடைக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.