புயல் பாதிப்பு - தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் நிதி வழங்கிட தமிழ்நாடு அரசு வேண்டுகோள்

 
assembly

‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை. செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடவுள்ளார்கள்.


இந்தச் சூழ்நிலையில், நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப்பினையும் வழங்கிட விருப்பம் தெரிவித்து, அரசைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும். புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக, மிக்ஜாம் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன்கீழ் விலக்களிக்கப்படும்.
 
இந்த நன்கொடைகளை மின்னணு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம்.

(1) வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி பற்றுச் சீட்டி சீட்டினைப்
(Receipt) பெற்றுக்கொள்ளலாம். https://cmprf.tn.gov.in 

(2) Electronic Clearing System (ECS) RTGS / NEFT &
கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.
வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கிளை   - தலைமைச் செயலகம்
சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070
IFS Code - IOBA0001172
சென்னை -600 009