முதல்வரின் அறிவிப்பு குறித்து அதிமுக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ரகுபதி

 
ragupathi

இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் அறிவித்தது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி அதிமுக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்த நிலையில், வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.  காங்கிரஸ் வேட்பாளர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுவது குறித்து மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என கூறினார். இந்நிலையில், இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் அறிவித்தது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி அதிமுக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரை சந்தித்து, அதிமுகவை சேர்ந்த இன்பதுரை புகார் மனு அளித்தார். 

Mk Stalin

இந்நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து அதிமுக வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்களுக்கான உதவித்தொகை குறித்து இபிஎஸ் கேள்விக்குதான் பரப்புரையில் முதலமைச்சர் பதிலளித்தார் என கூறினார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கான வாக்குறுதியை பரப்புரையில் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. இதற்காக அதிமுக வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார். இவ்வாறு கூறினார்.