குடியரசு தின விழா அணிவகுப்பு : தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு...

 
குடியரசு தின விழா


இந்த ஆண்டு  டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி வரும் 26-ஆம் தேதி புது டெல்லியில்  பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும்.  அப்போது  இந்தியாவில்  உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம்.  தமிழக அரசு சார்பில் பங்கேற்கும் அலங்கார வாகன  ஊர்திக்கு  மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

குடியரசு தின விழா

 ஏற்கனவே  மேற்குவங்க மாநிலத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு  மத்திய அரசு அனுமதி மறுத்தது.  இதற்கு அம்மாநில  முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.  இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் வாகன ஊர்திகள் நிராகரிக்கப்பட்டன. அதற்கு விதிமுறைகள் காரணமாக சொல்லப்பட்டிருந்தது.

குடியரசு தின விழா

இந்நிலையில் தற்போது  தமிழக அரசின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு  மத்திய அரசு நிராகரித்திருப்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குடியரசு தின  விழாவின் போது தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ. உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார் , பாரதியார் உருவங்கள் இடம்பெற்றிருந்தன.  ஆனால் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ. உ.சி, வேலுநாச்சியார் , பாரதியார்  போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள்  இடம் பெற்றால்தான் அனுமதிப்போம் என கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்நிலையில் அலங்கார ஊர்தி நிராகரிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும்,   மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.