சென்னையில் இன்றும் வெயில் வாட்டி வதைக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்!

 
Weather

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வெப்பநிலை நேற்றைவிட இன்று அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கோடை காலம் நிலவி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. ஆங்காங்கே ஒருசில இடங்களில் அவ்வபோது மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்த பாடில்லை. அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த போதிலும் கூட அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் -105.8 பாரன்ஹீட்டும், திருத்தணி-105.08பாரன்ஹீட்டும், ,சென்னை நுங்கம்பாக்கம்- 104.18 பாரன்ஹீட்டும், வேலூா்-104.18பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வெப்பநிலை நேற்றைவிட இன்று அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: சென்னையில் நேற்றை விட வெயில் அதிகமாக இருக்கும். நேற்று மீனம்பாக்கத்தில் வெயில் அதிகமாக இருந்தநிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என கூறினார்.