'1000' கோடி டாஸ்மாக் முறைகேடு- 6 மணி நேரம் துருவி துருவி விசாரணை செய்த அதிகாரிகள்
டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் இன்று நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில்(9வது முறையாக) மீண்டும் ஆஜரானார். இதே போல டாஸ்மாக் பொது மேலாளர்( கொள்முதல் மற்றும் நிர்வாகம்) சங்கீதா எட்டாவது முறையாக ஆஜரானார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.

டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரின் மனைவி வளைகுடா நாடு ஒன்றில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது ஜோதி சங்கர் இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுத்து, வளைகுடா நாடான துபாய்க்கு சென்று அங்குள்ள ஒரு தனியார் மதுபான நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி விட்டு அதை மறைத்து மீண்டும் தமிழகம் வந்து, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்துள்ளார் என்ன கூறப்படுகிறது. இது மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட பீர் உற்பத்தி நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதால் அந்த நிறுவனத்திடம் இருந்து புல்லட் இருசக்கர வாகனம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை( பதவி இறக்கம்) எடுக்கப்பட்டதாகவும் டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
அமலாக்கத்துறை விசாரணை ஆரம்பித்த பிறகு தற்போது பொதுமேலாளர் நிர்வாகம் சங்கீதா, கடந்த ஒரு வாரமாக மாவட்ட மேலாளர்கள் மற்றும் பில்லிங் பிரிவு இளநிலை உதவியாளர்களை அழைத்து கூட்டம் போட்டுள்ளார். எந்த மதுபான உற்பத்தி நிறுவனத்தின் ஹாட் வகை சரக்குகள் 40% க்கு மேல் விற்பனை இருக்க கூடாது. பீர் வகைகள் 35% க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என வாய் மொழி உத்தரவு வழங்கியுள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


