டாஸ்மாக் ஊழல்- அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் ரத்தீஷ்! வெளிநாடு தப்பியோட்டம்?
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் 2 நாட்களாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இவ்வழக்கு தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனை 2 முறை அழைத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை சம்மனின் அடிப்படையில் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். டாஸ்மாக் மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவின் துணை பொது மேலாளராக இவர் இருந்து வருவதாகவும், அதனால் தான் இவரிடம் விசாரணை நடத்துவது முக்கியம் என்பதால் 8-வது முறையாக இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த நிலையில் அதை வைத்து இவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அமலாக்கத்துறை கூறப்படுகிறது. ட்ரான்ஸ்ஃபர் பணி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கு உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டிய நிலையில் அது குறித்தும் இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு டாஸ்மாக் டெண்டர் எடுக்கப்பட்டது, அதற்கு எவ்வளவு வாகனச் செலவு ஏற்பட்டது, மதுபான ஆலைகளில் இருந்து எவ்வளவு கொள்முதல் செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்கப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு உதவி பொது மேலாளராக பணிக்கு சேர்ந்த ஜோதி சங்கர் தற்போது துணை பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவில் முக்கிய நபராக இருந்து வருகிறார். டாஸ்மாக் மதுபானங்கள் கொள்முதல் விற்பனை மட்டுமின்றி, பில்லிங் மெஷின் வாங்கியது, CCTV கொள்முதல் செய்தது ஆகியவற்றில் இவர்தான் முக்கிய பங்காற்றியவர் எனவும் கூறப்படுவதால் இவரிடம் நடத்தப்படும் விசாரணை இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அதிகாரிகள் கருதுகின்றனர். இதனிடையே, தொழிலதிபர் ரத்தீஷ் மற்றும் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் எங்கே? என அமலாக்கத்துறையினர் விசாரணையிலும் இறங்கி உள்ளனர். இதில், விசாகன் வீட்டிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட whatsapp உரையாடல் ஆவணங்களில் தொழிலதிபர் ரத்திஷ் என்பவருடன் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக தகவல் பரிமாற்றங்கள் இருப்பது தெரியவந்தது. இதனிடையே எம்ஆர்சி நகரில் உள்ள ரத்தீஷ் வசிக்கும் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த சென்றபோது வீட்டை திறந்து வைத்துவிட்டு தொழிலதிபர் ரத்தீஷ் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை வருவது தெரிந்து தொழிலதிபர் ரத்தீஷ் முன்பே சென்று விட்டாரா? அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு பயணம் சென்றுள்ளாரா? என அமலாக்கத் துறை விசாரிக்கிறது. அதேபோன்று இட்லி கடை, பராசக்தி, சிம்புவின் புதிய படம் உட்பட பல்வேறு திரைப்படங்களை தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த சோதனையின் போதும் அவர் வீட்டில் இல்லை. அவர் வெளியூர் சென்றிருக்கிறாரா? எங்கிருக்கிறார்? வெளிநாடு சென்று இருக்கிறாரா? என அமலாக்கத் துறையினர் விசாரிக்கின்றனர். அதன்படி விமான நிலைய ஆணைய அதிகாரிகளிடம் இருவரது சமீபத்திய விமான பயணங்கள் தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


