தவெக அட்டாக்..! ஏழை எளிய மக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள் என்பதை இப்பொழுதாவது ஒன்றிய அரசு ஒத்துக்கொள்கிறதா?

 
Q Q

தவெக கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் பொதுமக்களும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவையே.

ஜி.எஸ்.டி. அதிகமாக இருந்த காரணத்தால் ஏழை எளிய மக்கள் அவதிப்பட்டு, பல சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதனால் எண்ணற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒன்றிய அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து இருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் சில கேள்விகள் எழாமல் இல்லை.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பல பொருட்கள் / சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. ஐந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பால், ரொட்டி, தனிநபர் மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவற்றிற்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள், சிறிய கார்கள், விவசாய உபகரணங்கள் போன்றவற்றிற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இவையே சரியான வரி விகிதம் என்றால் இத்தனை ஆண்டுகளாக மிக அதிகமாக ஜி.எஸ்.டி. நிர்ணயம் செய்ததால் ஏழை எளிய மக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள் என்பதை இப்பொழுதாவது ஒன்றிய அரசு ஒத்துக்கொள்கிறதா?

எந்த ஓர் அரசும் வரி இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது. ஆனால் யாரிடமிருந்து வரி வசூலிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான கேள்வி. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தா? அல்லது ஏழை எளிய மக்களிடம் இருந்தா? கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சரிந்து வந்த பொருளாதாரத்தை மீட்கும் விதமாகக் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டது. உண்மையில் தற்போது அறிவித்த ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பை அப்பொழுதே அறிவித்திருந்தால் இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து வேகமாக மீண்டிருக்கும். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருந்திருக்கும்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களும் அனைத்துத் தொழில்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் மீதான வரியும் குறைக்கப்பட வேண்டும். அவற்றை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதைப் பற்றிக் கலந்தாலோசித்து விரைவில் உரிய முடிவை எடுக்க வேண்டும்.

மிக முக்கியமாக, ஒன்றிய மாநில வரிப் பகிர்விலும் உடனடியாகச் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு போன்ற அதிக நேரடி / மறைமுக வரி ஈட்டித் தரும் மாநிலங்கள், ஒன்றியத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது, கூட்டாட்சித் தத்துவத்திற்குச் சற்றும் உகந்தது இல்லை.

பீகாரில் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாக, இந்த வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்வியும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் எழாமல் இல்லை. தேர்தல் வெற்றி என்ற அரசியல் கணக்குகளை விடுத்து. நாட்டிற்கு எந்தச் சீர்திருத்தம் எப்பொழுது தேவை என்பதை உணர்ந்து அதன்படி ஆட்சி செய்வதே உண்மையான தேசப்பற்று; அதுவே சிறந்த ஆட்சி.

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. நடைமுறை மாற்றத்தால் மாநில வரி வருவாய் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் சில செய்திகள் வருகின்றன. எனவே இது குறித்தும் ஒன்றிய, மாநில அரசுகள் ஒரு விரிவான விளக்கத்தின் வாயிலாக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.