பருத்தி மீதான வரிவிலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..!!
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதால், பருத்தி மீதான 11% இறக்குமதி வரிகளை நீக்க வேண்டும் என ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் , பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்திய ஜவுளித் துறைக்கு உதவியாக பருத்தி மீதான 11 % இறக்குமதி வரிக்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை தற்காலிகமாக விலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்ட இந்த வரிவ்லக்கு மேலும் 3 மாதங்களுக்கு , அதாவது டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் உள்ளீட்டுச் செலவுகளை குறைக்கும் என்றும், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை இது அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தி மீதான 11% இறக்குமரி வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது தொழில்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


