காதல் விவகாரத்தில் ஆசிரியை கொலை - கைதானவர் தற்கொலை முயற்சி

 
அ அ

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியரை படுகொலை செய்த வழக்கில் கைதாகி புதுக்கோட்டை மாவட்ட சிறையிலிருந்த இளைஞர் அஜித் குமார் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை முயற்சித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் மேலக்கலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா (26) ஆலங்குடி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காவியாவும் அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் அஜித்குமாரும் (29)  கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே சமூகத்தினராக இருந்த போதும் காவியாவின் பெற்றோர் அஜித் குமாருக்கு காவியாவை திருமணம் செய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து வேறொரு பையனுக்கு காவியாவை நிச்சயம் செய்து கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவியாவும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் காவியாவிற்கு நிச்சயம் ஆன புகைப்படங்களை அஜித்குமாருக்கு காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் குமார் காவியா மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த 27ம் தேதி காலை வழக்கம்போல் காவியா இருசக்கர வாகனத்தில் அவர் பணிபுரியும் பள்ளிக்கு சென்றபோது மாரியம்மன் கோயில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே காவியாவை வழிமறித்த அஜித்குமார் தான் மறைத்து வைத்திருந்த அருவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அம்மாபேட்டை காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். இந்நிலையில்தான் அஜித்குமார் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் இருந்த நிலையில் இன்று காலையில் அவர் சிறையில் இருந்து அறையிலேயே கைலியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் கையில் தூக்கிட்டு தொங்கியபோது சிறை காவலர்கள் அவரை மேலிருந்து கீழ் இறக்கி உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்துள்ளனர். தற்போது அஜித்குமார் உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் சிறைகாவலர்களும் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நகர காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் அஜித்குமாரின் தற்கொலை முயற்சியில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பாக சிறை காவலர்கள் தான் அஜித்குமாரின் இந்த நிலைக்கு காரணம் என்றும் அதனால் இதில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அஜித்குமாரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.