பாஜக நிர்வாகிகள் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பரபரப்பு
புதுச்சேரியில் தொழில்நுட்ப கோளாறால் பாஜக முக்கிய நிர்வாகிகள் பயணித்த புதுச்சேரி- பெங்களூர் விமானம் ரத்தானது.

புதுச்சேரிக்கு ஹைதராபாத்திலிருந்து வந்து மாலை 5.15 மணியளவில் பெங்களூருக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் உருளும் போது தொழில்நுட்பக் கோளாறை விமானி கவனித்ததை அடுத்து, மீண்டும் விமான நிலைய ஏப்ரனுக்குக் கொண்டு வரப்பட்டது. விமானத்தில் மொத்தம் 81 பயணிகள் இருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக மாநிலத்தலைவர் பதவியேற்பு நிகழ்வுக்கு வந்திருந்த பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் தருண்சுக், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் விமானத்தில் இருந்தனர். கோளாறை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டால் பெங்களூர் விமானம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டு செல்லும் வசதி புதுச்சேரி விமான நிலையத்தில் இல்லை. இதையடுத்து பாஜக முக்கிய நிர்வாகிகள் கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்.


