இனிமேல் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது - தெலங்கானா அரசு அதிரடி
தெலங்கானா மாநிலத்தில் எந்தவொரு படத்துக்கும் இனிமேல் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாது என்று மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் நாடு முழுவதும் நேற்று வெளியாகி வசூல் வேட்டையைக் குவித்து வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். மைத்ரி மூவி தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி, நேற்று (டிச.5) வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தற்போது, முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது, ஹைதராபத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்கு உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு மேலாளர் மீதும் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் எந்தவொரு படத்துக்கும் இனிமேல் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாது என்று மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 திரைப்பட சிறப்பு காட்சியை பார்க்க சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக தெலங்கானா அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதனால் இனிமேல் தெலங்கானா மாநிலத்தில் எந்தவொரு திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சி வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடதக்கது.


