தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும் - வானிலை மையம் எச்சரிக்கை..
"தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (18-06-2025) காலை 0530 மணி அளவில் மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 0830 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஜார்க்கண்ட் வழியாக நகரக்கூடும்.
நேற்று குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (18-06-2025) காலை 0830 மணி அளவில் மத்திய ராஜஸ்தான் பகுதிகளில் நிலவுகிறது.
இன்று (ஜூன் 18) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை ( ஜூன் 19) முதல் ஜூன் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு :
இன்றும் , நாளையும் ( ஜூன் 18,19) அதிகபட்ச வெப்பநிலை உள்தமிழகத்தில் ஒருசில இடங்களில் 1-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
18-06-2025 மற்றும் 19-06-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


