தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பம் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

 
Weather

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக,
வருகிற 20 மற்றும் 21ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச
வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.