ரூ.1 லட்சம் கமிஷன் கேட்ட கோயில் செயல் அலுவலர்- தட்டி தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை

 
ச்

ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஜோதியை லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக கைது செய்து சிறையிலடைத்தனர். 

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. மேலும் இவர் மன்னார்குடி ஒத்தை தெருவில் உள்ள  ஆனந்த விநாயகர் கோவிலிலும் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். சென்னையில் உள்ள பக்தர் ஒருவர் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு குடிநீர் வசதிக்காக ரூ. 45 ஆயிரத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட கருவி ஒன்றை வழங்கி உள்ளார். இதனை அவர்  வீட்டிற்கு சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது, கோவிலில் ஏலம் விடப்படும் பொருட்கள் தொகையை முறையாக கணக்கில் காட்டப்படாமல் இருத்தல் போன்ற தொடர் செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும்  திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில்  பணியாற்றி வரும் எழுத்தர் ஆலத்தம்பாடி தொழுதூரை அடுத்த செம்பிய வேலூரை சேர்ந்த சசிகுமாரிடம், அவரது  2015-ம் ஆண்டு  முதல் இந்த ஆண்டு வரை உள்ள சம்பளம் நிலுவைத் தொகை ரூ 2 லட்சத்து 86 ஆயிரம்  ஒட்டுமொத்தமாக கொடுத்து கணக்கு  முடிப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார் ஜோதி. சசிகுமார் இது குறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபாலிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி இன்று மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோவிலில் செயல் அலுவலர் ஜோதியிடம் சசிகுமார் ஒரு லட்சம் ரூபாய் ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை கொடுக்கும் பொழுது அங்கு மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சித்ரா , அனிதா ஆரோக்கியமேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை குழுவினர் ஜோதியை கையும் களவுமாக பிடித்து  கைது செய்து வழக்கு பதிவு செய்து திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் .