தென்காசி மாவட்ட மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

 
rain

தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், அம்மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், அம்மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்ட மக்கள் கவனத்திற்கு  பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளுக்கு சென்று குளிக்க வேண்டாம்; நீர்நிலைகளுக்கு ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.