தஞ்சையில் பயங்கரம்..! - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுக்காகக் கொடி நடும்போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி..!
தஞ்சை பிள்ளையார்பட்டி - திருவையாறு புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான முன்னேற்பாடாக மண்டபத்தின் அருகே இரும்பு குழாய்களில் திமுக கொடிக் கம்பங்களை நடும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
கொடி கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் (45) மற்றும் கோகுல் (29) ஆகிய இருவரும், மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியை கவனிக்காமல் இரும்பு குழாயை உயர்த்தியுள்ளனர். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அங்கிருந்த போலீசார் மற்றும் ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துணை முதல்வரின் வருகைக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகளின் போது இரு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


