சேலத்தில் விரைவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்- அமைச்சர் ராஜேந்திரன்
துணை முதலமைச்சராக பதவி ஏற்று முதல் முறையாக சேலம் மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நாளை மாலை , மாவட்ட எல்லையான தலைவாசலில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், “நாளை கள்ளக்குறிச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பின்னர் நாளை மாலை சேலம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். துணை முதலமைச்சராக பதவி ஏற்று முதன்முறையாக சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, மாவட்ட எல்லையான தலைவாசலில் நாளை மாலை நான்கு மணி அளவில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை இரவு சேலத்தில் தங்கும் துணை முதலமைச்சர் அவர்கள் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை நேர கலை அரங்கில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் சேலம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2500 வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சேலம் அருகே கருப்பூரில் உள்ள தீர்த்தமலை கவுண்டர் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கே இருக்கிறார்கள். இதில் துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை திண்டுக்கல் செல்கிறார்.
சேலத்தில் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜவுளி பூங்கா தொடங்கப்பட உள்ளது . அதற்கான பணிகள் முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி விரைவாக நடைபெற்று வருகிறது. சேலத்தில் பருவ மழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


