விஜய்க்கு மாற்று வேட்பாளர் 'தளபதி' சிவா! தவெக தலைவர் விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?

 
1

2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல்முறையாக விஜயின் தவெக கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து  போட்டியிடுகிறது. இதில் விஜய் மட்டும் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். 

இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் தவெக செயலாளராக இருக்கும் சிவா என்பவர் தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அத்தொகுதி மக்களால் தளபதி சிவா என அடைமொழியோடு அழைக்கப்படுகிறார்.  அவரும் தேர்தலுக்காக தீவிரமாக களப்பணியாற்றி வந்தார். இந்நிலையில் அங்கு விஜய் களமிறங்குகிறார். 

தவெக வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் சிவாவை மேடைக்கு அழைத்து தனக்காக விட்டுக்கொடுத்ததை விஜய் தெரிவித்தார். இது அவரது தொண்டர்களை மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அதனை கொண்டாடி வருகின்றனர். 

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளும் திமுக கோட்டை என அழைக்கப்படுகிறது. அந்த வரலாறை மாற்றும் பொருட்டு விஜய் களமிறங்கியுள்ளார். கடந்த 2019 இடைத்தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது. ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த நிலையில் அவரே  மீண்டும் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்பகுதி நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். அதேபோல் குறிப்பிட்ட அளவு கிறிஸ்தவ மற்றும் வன்னியர் மக்கள் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக விஜய் இந்த தொகுதியை தேர்வு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய், வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.அவருக்கு மாற்று வேட்பாளராக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கலின்போது, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடனிருந்தனர்.