இளையராஜாவின் கருத்து முதன்மையான சிக்கலா? வேறெதுவுமே இங்கே இல்லையா?

 
tn

இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா?  இயக்குனர் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.

tn

மோடியும், அம்பேத்கரும் என்ற தலைப்பில் ப்ளூ கிராஸ் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.  அதில் முன்னுரை எழுதிய  இளையராஜா , பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைந்துள்ளது . சமூகநீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார்.  அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து மிகப்பெரிய கனவு கண்டவர்கள் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.  அம்பேத்கரையும், மோடியையும்  ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது . இளையராஜா தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில்,  மோடி - அம்பேத்கர் குறித்த கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இசைஞானி இளையராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார். இளையராஜாவுக்கு ஆதரவும்,  எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளது. 



இந்நிலையில் இயக்குனர் தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில், " இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும், போராடவும், வாதங்கள் புரிவதற்கும் வேறெதுவுமே இங்கே இல்லையா? மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல் பிழைப்பு வாதிகளும், ஊடக பிழைப்பு வாதிகளும் இதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும், குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரி பொருள் விலை உயர்வு, தொடர் மின் வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதே போல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.