13 ஆண்டு கால சகாப்தம் முடிவுக்கு வந்தது..! இந்தியாவின் மெசஞ்சரான ‘ஹைக்’ செயலி மூடப்படுகிறது..!

 
1 1

13 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்க நிறுவனமான மெட்டாவின் வாட்ஸ்ஆப் மெசஞ்சருக்கு போட்டியாக ‘ஹைக்’ செயலி உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதன்மையான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லை உருவாக்கிய சுனில் பார்தி மிட்டல் மகன் கவின் பார்தி மிட்டல் தான் இதன் நிறுவனர்.

வாட்ஸ்ஆப் செயலிக்கு நிகராக வளர்ந்து வந்த ஹைக்கின் 2016 சந்தை மதிப்பு 12,300 கோடி ரூபாயாக இருந்தது. பின்னர் அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்த நிறுவனம், 2021 காலகட்டத்தில் மெசஞ்சர் செயலியை நிறுத்தி விட்டு, ‘ரஷ்’ (Rush) எனும் ஆன்லைன் பண விளையாட்டுத் தளத்தை உருவாக்கியது.கேரம், லூடோ போன்ற விளையாட்டுகள் இதில் இடம்பெற்றிருந்தன. மேலும், போட்டியாளர்கள் பணத்தை வைத்து இதில் விளையாடி வெற்றிக்கான சன்மானங்களை பண மதிப்பில் பெற முடியும். ஹைக்கின் இந்த அதிரடி ‘ரஷ்’ விளையாட்டுத் தளம், சுமார் ஒரு கோடி பயனர்களை ஈர்த்தது.

ஆன்லைன் கேம் மோகம் அதிகரித்திருந்த காலகட்டம் என்பதால், நிறுவனத்தின் மதிப்பும் வேகமாக உயர்ந்தது. இதன் மூலமாக சுமார் 4 ஆண்டுகளின் வருவாய் ரூ.4,400 கோடி என ஹைக் நிறுவனர் கவின் பார்தி மிட்டல் தெரிவித்திருந்தார்.

தற்போது ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம், 2025 நிறைவேற்றப்பட்டதன் மூலம், உண்மையான பணத்தை மதிப்பாக வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் தளங்கள் பாதிக்கப்பட்டன. இதில் ‘ஹைக்’ (Hike) செயலியும் சிக்கி வெளியேறியுள்ளது.

மூடுவிழா காணும் ‘ஹைக்’ தொடர்பாக பேசிய அவர், “பணம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகள் இந்தியாவை விட அமெரிக்காவில் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்கு சட்டத்திட்டங்களால் இவ்விளையாட்டு சந்தையில் பாதிப்புகள் ஏற்படுகிறது. அமெரிக்க ஆன்லைன் கேமிங் சந்தை சிறப்பாக செயல்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.