வந்தாச்சு செம அறிவிப்பு..! மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி..!

 
1 1

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. கரோனா தொற்று குறைந்த பின்னர், திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், கல்லூரி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கு, தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச டெண்டரை கோரியது.

மடிக்கணினிகளை வழங்கும் நிறுவனம், ஒரு வருட உத்தரவாதம் மற்றும் குறைந்தபட்சம் மூன்று வருட சேவையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இன்டெல் நிறுவனத்தின் i3 ஜெனரேஷனின் 1210 U, 1215 U, 1220 P ஆகிய புராசஸர்களும், ஏஎம்டி (AMD) நிறுவனத்தின் R3 7320U, R3 7330U, R3 7335U ஆகிய புராசஸர்கள் அல்லது இவற்றிற்கு இணையான திறன் கொண்ட புராசஸர்களுடன் மடிக்கணினி இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

அதுமட்டுமின்றி, 14 அங்குலம் அல்லது 15.6 அங்குலம் அளவு கொண்ட திரை இருக்க வேண்டும். 8 ஜிபி டிடிஆர் 4 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி (SSD) ஹார்ட் டிஸ்க் இருப்பது அவசியம். ப்ளூடூத் 5.0 வெர்ஷன், குறைந்த ஐந்து மணி நேரமாவது தாங்கும் 4 அல்லது 6 செல்கள் அடங்கிய லித்தியம் அயன் பேட்டரி, 720 பிக்சல் எச்டி கேமரா, விண்டோஸ் 11 இயங்குதளம். குறைந்தது 3 யூஎஸ்பி போர்ட்டுகள் (ஏதேனும் ஒன்று 3.0 வெர்ஷனில் இருப்பது அவசியம்), கீபோர்டில் தமிழ் எழுத்துகள் அவசியம் என்ற வரைமுறைகளையும் எல்காட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின் படி, குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனங்களுக்கு மடிக்கணினி விநியோக அனுமதி வழங்கப்படும் எனவும் எல்காட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் விலையில்லா மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது, Acer, Dell, HP நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்தன.

டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினிக்கு ரூ.40,828 என்ற விலையில் டெல் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை சமர்ப்பித்துள்ளது. அதேபோல், ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினிக்கு ரூ.23,385 என்ற குறைந்த விலையில் ஒப்பந்தம் சமர்ப்பித்துள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களில் இருந்து 20 லட்சம் மடிக்கணினிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து ஒரு மாதத்தில் லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், அக்டோபர் மாதத்திலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.