அரை வினாடி தூக்கத்தால் பறிபோன 5 பேர் உயிர்! 50 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்ததன் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம் மீரான்குளம் பகுதியில் இருந்த சாலையோர கிணற்றுக்குள் ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக மூழ்கியதில் வேனில் இருந்து ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளை பகுதியில் நடைபெறும் அசன பண்டிகைக்காக கோயமுத்தூரை சேர்ந்த 8 பேர் குடும்பத்தினரோடு ஆம்னி வேனில் வந்துள்ளனர். சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் பாய்ந்துள்ளது. இதில் 3 பேர் நீந்தி வெளியே வந்துள்ளனர். மேலும் 5 பேர் கிணற்றுக்குள் வேனில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் டிஎஸ்பி சுகுமார் தலைமையிலான போலீசாரும் சாத்தான்குளம் தீயைணப்புத்துறையினரும் விரைந்து வந்தனர்.
சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் 2 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. கிணற்றுக்குள் இருக்கும் சகதியில் கார் சிக்கியிருந்ததால் மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது. ஜேசிபி இயந்திரத்தில் கயிற்றை கட்டி வேனை மீட்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டதால் மீட்பு பணிகளுக்காக நெல்லை, தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கிணற்று தண்ணீரில் மூழ்கி தீயணைப்பு வீரர்கள் கயிறுகளை வேனில் கட்டி கிரேன் உதவியுடன் கிணற்றில் இருந்து வேன் மீட்கப்பட்டனர். வேனில் இருந்து ஒரு குழந்தை உள்பட இரண்டு ஆண் மற்றும் 2 பெண் என 5 பேர் சடலங்கள் மீட்கப்பட்டது.

மீட்பு பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் ஆகியோர் பார்வையிட்டனர். வேனின் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி கிணற்றுக்குள் மூழ்கியதா அல்லது வேலை ஓட்டிய நபர் கண் அசந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மீரான்குளம் சாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.


