5 மாத சிசுவை கருக்கலைப்பு செய்து குப்பையில் வீசிய கொடூரம் - திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூர் தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் ஆண் குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் சிசுவின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிசுவின் சடலத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆண் சிசு ஐந்து மாத நிலையில் கருக்கலைப்பு செய்யப்பட்டு குப்பைத்தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் 320 கிராம் எடை மட்டுமே சிசு இருந்ததாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் சிசுவை குப்பைத்தொட்டிகள் வீசிச் சென்ற நபர்கள் யார் என்பது குறித்தும் கருக்கலைப்பு செய்யப்பட்டு சிசு குப்பைத்தொட்டியில் வீசப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


